Tuesday, September 27, 2016

பத்தாண்டு சேவையில் சென்னைநூலகம் - ஓர் நினைவேந்தல்...

அன்பு நண்பர்களே!

சென்னைநூலகம்.காம் தளம் தனது பத்தாண்டு சேவையை நிறைவு செய்துள்ளது (25-09-2006 - 25-09-2015). இதுவரை கடந்து வந்த பாதையைப் பற்றியும், இனி வரும் காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகள் குறித்தும் இனி நான் இந்த வலைப்பூ மூலம் நேரடியாக பேச  உள்ளேன்.

24-09-2006 பதிவு செய்யப்பட்டு 25-09-2006 அன்று இணையதளம் செயல்படத் தொடங்கினாலும், உண்மையில் அதற்கு முன் பலவருடங்களாகவே அதற்கான பணிகள் நடந்து வந்தன என்று தான் சொல்லவேண்டும். 2000ஆம் வருடத்தில் எமது சென்னைநெட்வொர்க்.காம் தளம் ஆரம்பித்ததிலிருந்தே அவ்வப்போது எனக்குத் தோன்றிய நூல்களை அத்தளத்தில் பதிவேற்றி வந்தேன். வருடங்கள் பல கடந்த நிலையில் அதில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் சேர்ந்திருந்தன. அச்சமயத்தில் நான் அவற்றை தொகுத்து தமிழ் மின்னூல் தொகுப்பு என்ற பெயரில் குறுந்தகடாக வெளியிட்டேன். பின்னர் கம்பராமாயணம், கல்கியின் படைப்புக்கள் மற்றும் புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆகியவை மின்னூல் குறுந்தகடுகளாக வெளிவந்தன.


அந்த சூழ்நிலையில் ஒரு நாள் வாசகர் ஒருவருக்கு குறுந்தகடுகளைக் கொடுப்பதற்காக மேற்கு மாம்பலம் சென்றிருந்தேன். அப்போது மாலை மயங்கிய நேரம். மின்சாரம் தடைப்பட்டிருந்தது. நான் சென்று பார்த்த நபர் அடுத்த நாள் சவுதி செல்ல இருந்ததால் அவர் வீட்டிலும் உறவினர் கூட்டம். இருப்பினும் அவர், அந்த உறவுகளிலிருந்து விலகி வந்து என்னை அவர் வீட்டின் பால்கனிக்கு அழைத்து சென்றார். அவர் முகம் கூட எனக்கு சரியாக தெரியாத இருட்டு சூழ்நிலை. ஆனால் அவர் விதைத்த விதை தான் இன்று பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அவர் தான் தேன்கூடு.காம் (வலைப்பூ திரட்டி) இணையதளத்தின் திரு.சாகரன் (கல்யாண்).

அன்று அவர் தமிழ் நூல்களுக்கென தனியாக இணையதளம் துவங்கி அவற்றில் ஏற்கெனவே வெளியிட்டுள்ள நூல்களை இடமாற்றம் செய்யச் சொன்னார். இதன் மூலம் நல்ல வளர்ச்சி உண்டாகும் என்று நம்பிக்கை ஊட்டினார்.

அவர் விதைத்த விதையை உயிர்ப்பிக்க நான் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஓரிறு தினங்களிலேயே ஆரம்பிக்கப்பட்டது தான் சென்னைநூலகம்.காம் தளம். அதன் பின்னர் பல முறை நானும் அவரும் தொலைபேசி வாயிலாக பேசி இத்தளத்திற்கு மெருகூட்டினோம். அடுத்த முறை டிசம்பர் வாக்கில் அவர் வந்திருந்த போது என்னால் அவரை நேரில் சந்திக்க முடியவில்லை. கண்டிப்பாக அடுத்த முறை வரும் போது சந்தித்து மேலும் பேசலாம் என்றார். ஆனால் விதி வேறு மாதிரி நினைத்திருந்ததே என்ன செய்ய... பிப்ரவரி 11 2007ல் திடீரென அவர் மாரடைப்பால் மரணமடைந்த போது அவருக்கு வயது 32. (ஜூலை 22 1975 - பிப்ரவரி 11 2007) தமிழுக்கு உண்மையில் ஓர் இழப்பு என்று தான் நான் சொல்வேன்.

அதன் பிறகு அவரைப் போல் ஊக்குவிக்க யாரும் இல்லா சூழ்நிலையில் நானே தட்டுத் தடுமாறி வளர்த்தது சென்னைநூலகம்.காம் தளம்...

சாகரன் பற்றிய சிறு குறிப்புக்கு:
https://ta.wikipedia.org/wiki/சாகரன்

முதல் பதிவில் இது போதுமே... தொடர்ந்து பேசுவோம்...

கோ.சந்திரசேகரன்
admin@chennailibrary.com
9444086888, 7373386888
Post a Comment