Monday, October 17, 2016

அடுத்த நூல் எப்போது...

சென்ற வருடம் (அதாவது 2015) ஜூலை மாதம் நெய்வேலி புத்தக காட்சிக்கு தான் கடைசியாக எமது கௌதம் பதிப்பகம் சார்பில் நூல் அச்சடித்தது. அதன் பிறகு ஓராண்டுக்கு மேல் ஆகியும் எந்த ஒரு நூலும் அச்சடிக்கவில்லை.

எமது பதிப்பகம் சார்பில் ஏறக்குறைய நூறு நூல்கள் அச்சடித்துவிட்ட நிலையில் ஏன் இந்த தொய்வு?

காரணங்கள் பல...

1. தொடர்ந்து அரைத்த மாவையே அரைக்கும் நூல்களிலிருந்து விலகி தரமான நூல்களை எதிர்நோக்கிதன் விளைவு. என் மனதுக்கு உகந்த நூல் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

2. ஏற்கனவே எழுதி அச்சிடுவதாக ஒப்புக் கொண்ட நூல்கள் இரண்டு, இந்த ஒரு வருடத்தில் நான் எழுதிய நூல் ஒன்று என ஆக மொத்தம் 3 நூல்கள் கிடப்பில் உள்ளன. இருப்பினும் அவற்றையாவது அச்சிற்கு கொண்டு செல்லாததற்கு நிதி பற்றாக்குறைதான் முக்கிய காரணம்.

ஏன் நிதி பற்றாக்குறை...

முதலில், நூல் அச்சடித்த செலவுக்குக் கூட விற்பனை செய்ய இயலவில்லை. என்ன காரணம் என்றால்...

1. கடைகளில் போட்டால் அவர்களிடம் காசு வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. 10 புத்தகம் கொடுத்தால் 9 விற்பனையானால் கூட காசு கொடுக்காமல் இழுத்தடிக்கும் போக்கு... ஒரு முறை நூல் கொடுத்து காசு வாங்குவதற்கு குறைந்தது ஆறு மாதமாகிறது...

2. புத்தகத் திருவிழாக்களில் நடைபெறும் விற்பனையை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதுவும். ஒரு சில திருவிழாக்களை தவிர மற்றவைகள் லாபம் தராமல் பெருத்த நஷ்டத்தை உண்டு பண்ணுகின்றன. உதாரணமாக கடந்த ஒரு ஆண்டில் மட்டும், எனக்கு தெரிந்து, சென்னை, அரியலூர், தூத்துக்குடி, கோவை என அனைத்தும் தோல்விதான். நல்ல வேளையாக இந்த திருவிழாக்களில் எதிலும் நான் பங்கேற்கவில்லை. (அல்லது பபாசி சங்கத்தினர் நான் உறுப்பினர் இல்லை என்பதால் வாய்ப்பு வழங்கவில்லை. இன்னும் ஏன் உறுப்பினராகச் சேரவில்லை என்று என்னைக் கேட்காதீர்கள். என்னை ஏன் சேர்க்கவில்லை என்று அவர்களைக் கேளுங்கள். முடிந்தால்...)

இதையும் மீறி கடந்த ஒரு ஆண்டாக நான் பங்கேற்ற திருவிழாக்களில் ஒன்றில் மட்டும் தான் லாபம், 2ல் லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை, 2ல் பெருத்த நஷ்டம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், லாபமும் இல்லை நஷ்டமுமில்லை என்ற நிலை தான். இந்த நிலையில் எதை நம்பி புதிதாக புத்தகங்கள் அச்சடிப்பது.

பத்து புத்தகங்கள் கூட போடாதவர்கள், பதிப்புத்துறையிலிருந்தே விலகியவர்கள், சென்னை புத்தகக் காட்சி தவிர வேறு எந்த புத்தகக் காட்சியிலும் பங்கேற்காதவர்களெல்லாம் இன்னமும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இதில் தமிழர்களுக்கு அனைத்து வகையிலும் உதவியாக(?) இருக்கும் கன்னட, மலையாள, தெலுங்கு பதிப்பகங்களும் சேர்த்தி வேறு. தமிழ் பதிப்பங்களை அவர்கள் எவரும் ஒரு பொருட்டாகக் கூட மதிப்பதில்லை என்பது தான் உண்மை.

பபாசி சங்க நிர்வாகிகளாக யார் வந்தாலும் அவர்களுக்கு வேண்டிய பதிப்பகங்களை அல்லது அவர்களின் பினாமி பதிப்பகங்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கிறார்கள். அப்போதுதானே விற்பனை முழுவதும் வேறு கைகளுக்கு போகாமல் அவர்களே வைத்துக் கொள்ளமுடியும் என்ற நல்ல எண்ணம். இருக்கட்டும் இந்த கூத்து இன்னும் எத்தனை வருடத்துக்கு நடக்கிறது என பார்க்கலாம் என்று தான் நான் அமைதியாயிருக்கிறேன்.

அவர்கள் எப்படியோ போகட்டும்... ஒரு வருடமாக எனக்கே ஒரு தொய்வு வந்துவிட்டது. இனிமேலும் இத்தகைய பதிப்பக அரசியல் மிகுந்த, அடுத்த பதிப்பகத்தின் அழிவுக்காக காத்திருக்கும் பதிப்பகங்கள் மிகுந்த, பெரும்பாலும் நஷ்டமே தரக்கூடிய புத்தகக் காட்சிகளுக்கு செல்லத்தான் வேண்டுமா என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது.

அதனால்... மற்றவர்களைப் போல் நாம் ஏன் செல்ல வேண்டும்...

எனவே பாதை மாற்ற முடிவு செய்து அதற்கான செயல்களில் இறங்கியுள்ளேன்... அந்த செயல்பாடுகள் முடியும் வரை புத்தக பதிப்பை தாற்காலிகமாக நிறுத்தியுள்ளேன். அவ்வளவே... விரைவில் முன்பைப் போலவே தரமான தரத்தில், சிறந்த நூல்களை வெளியிடுவேன்... பொறுத்திருங்கள்...

என்ன திட்டம் என்கிறீர்களா... அது சஸ்பென்ஸ்...
Post a Comment